Rock Fort Times
Online News

பா.ஜ.க.வை கண்டித்து கோவையில் 16-ந் தேதி கண்டன பொதுக்கூட்டம்…

தி.முக.கூட்டணி கட்சிகள் அறிவிப்பு..

பா.ஜ.க.வின் பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து கோவை மாநகர், சிவானந்தா காலனியில் வருகிற 16-ம் தேதி, மாலை 5 மணி அளவில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், மக்கள் விரோத ஆட்சியை கடந்த 9 ஆண்டுகளாக நடத்திக் கொண்டு இருக்கிறது மத்திய பாஜக அரசு.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது பாஜக தலைமை. மாநிலங்களில் நடந்த பல்வேறு சட்டமன்றத் தேர்தல்களில் வரிசையாகத் தோற்று வருவதும், நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் காட்டி வரும் எதிர்ப்பும் சேர்ந்து எந்தச் செல்வாக்கும் இல்லாத அரசாங்கமாக தேய்ந்து விட்டது அவர்களுடைய ஆட்சி.
இந்தியா முழுமைக்கும் பாஜகவுக்கு எதிரான அரசியல் ஜனநாயக சக்திகளின் அணிச் சேர்க்கைக்கான நாளாக ஜூன் 23-ம் தேதி குறிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் மதவாத, எதேச்சதிகார அரசியலை வேரறுக்கும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையைச் சீர்குலைக்கவும், கட்சிகளின் உறுதியைக் குலைக்கவும் முயற்சிகள் எடுக்கிறது. அதற்கு அடையாளமாக பல்வேறு மாநிலங்களில் விசாரணை அமைப்புகளின் மூலமாக பாஜக பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
அந்தவகையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை நேற்றைய தினம் 17 மணி நேரம் விசாரணை என்ற பெயரால் சித்ரவதை செய்துள்ளார்கள். நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இதயச் சிகிச்சை செய்ய வேண்டிய அளவுக்கு நெருக்கடியை உண்டாக்கி விட்டார்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியை , அதுவும் அமைச்சரைச் சித்ரவதை செய்வதன் மூலமாக அச்சுறுத்துவது அரசியலே தவிர, விசாரணை அல்ல. மேலும், தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்துக்குள் மத்திய பாதுகாப்புப் படை போலீசாரை அழைத்து வருவது தான் மாநில ஆட்சியின் மாண்பைக் காக்கும் முறையா? இதன் மூலமாக எங்கும், எப்போதும் நுழைந்து எதையும் செய்வோம் என்ற ஆணவ போக்கே தெரிகிறது. எச்சரிக்கை விடுக்கிறார்களா?, மிரட்டுகிறார்களா? இவை எதற்கும் பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல. இதனை கண்டித்து ஜூன் 16-ல் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் கோவையில் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்