அம்பாசமுத்திரம், பெருந்துறையில் தேர்தல் நடத்தலாம்: திருச்சி கிழக்கு உட்பட 3 தொகுதிகளுக்கு தடை நீட்டிப்பு… * சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவற்றின் ஆதரவுடன் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்தது. இது ஒருபுறம் இருக்க, பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் முதல்வர் விஜய் வெற்றிப் பெற்றதால், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதன் காரணமாக, திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர், ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளை தவிர்த்து, மற்ற தொகுதிகளில் எம்எல்ஏக்களின் வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டன.
இதையடுத்து மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் அண்மையில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதற்கிடையே, தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலியை சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் அது பல்வேறு சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும், தேர்தல் வழக்கில் வெற்றி பெறுபவரும், இடைத்தேர்தலில் வெற்றி பெறுபவரும் ஒரே தொகுதிக்கு தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதால் பிரச்சனை உண்டாகும் எனவும் கருத்து தெரிவித்தது. மேலும், 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து கடந்த ஜூலை மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு இன்று (நவ.27) காலை தீர்ப்பளித்தது. அப்போது அம்பாசமுத்திரம், பெருந்துறையில் தேர்தல் நடத்தலாம்
என்றும், 3 தொகுதிகளுக்கு தடை நீடிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.


Comments are closed.