“நான் எடுத்த நடவடிக்கைகளால் சிலரின் அடிமட்டமே ஆடிப் போய் இருக்கிறது”…* முதலமைச்சர் விஜய் பரபரப்பு பேச்சு!
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்- 2 பொதுத் தேர்வில் சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கடந்த 2023-ம் ஆண்டு முதல் கல்வி விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகளை த.வெ.க. தலைவர் விஜய் வழங்கி வருகிறார். முதலமைச்சர் ஆன பிறகு விஜய், முதல்முறையாக இந்த ஆண்டு 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்- 2 பொதுத்தேர்வில் சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு சென்னையில் கடந்த 4-ந்தேதி விருது வழங்கி கௌரவித்தார்.
இந்த நிலையில் 2-ம் கட்டமாக த.வெ.க. சார்பில் மாணவ மாணவிகளுக்கு கல்வி விருது மற்றும் ஊக்கத் தொகை வழங்கும் விழா சென்னையில் இன்றும்,(26-11-2026) நாளையும் நடக்கிறது. சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் இந்த விழா நடைபெறுகிறது. இன்று கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த சட்டமன்ற தொகுதிகளில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்- 2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது மற்றும் ஊக்கத் தொகைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
உங்கள் மத்தியில் ஒரேயொரு விஷயம் சொல்ல நினைக்கிறேன். இதை சிலர் அரசியலாக்க முயற்சி செய்வார்கள். அதைப் பற்றி எல்லாம் கவலையில்லை. உங்களிடம் இதை சொல்லியே ஆக வேண்டும். இது மாணவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். வாழ்க்கையில் எங்கெல்லாம், எப்போதெல்லாம் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். ஊழல், பழைய விஷயம் தான். மக்கள் எல்லாரும் அதற்கு பழகிப் போய்விட்டார்கள் என்று கடந்து போய் விட முடியாது. அது ஒரு நாள்பட்ட நோய் போன்றது. அதை சரிசெய்வதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை நாம் செய்துதான் ஆக வேண்டும். அதை சரிசெய்ய முடியுமா என்று சிலர் கேள்வி கேட்பார்கள். முடிந்தவரை அதை கட்டுப்படுத்த நாம் முயற்சி எடுக்க வேண்டும். அப்படி நான் எடுத்த சில முயற்சிகளால் தான் சிலரின் அடித்தளமே ஆடிப்போய் கிடக்கிறது.
நூலகத்திலும் ஊழல்,
சமீபத்தில் நடந்த ஊழல் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கல்வித்துறையில் ஊழல் நடந்தால் அதை பார்த்துக்கொண்டு எப்படி சும்மா இருக்க முடியும்? எந்த துறைகளில் தவறு நடந்தாலும் தவறு தவறுதான். கல்வித்துறைதானே அடித்தளம். எல்லாவற்றையும் விட அதுதானே முக்கியம். எதிர்காலம் மாணவர்கள் தானே. பள்ளிகளின் பாதுகாப்பில் விளையாடி இருக்கிறார்கள். எப்படி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியும்? மாணவர்கள் படிக்கும் நூலக புத்தகங்களில் கூட ஏ.ஐ.யை பயன்படுத்தி ஊழல் செய்திருக்கிறார்கள். இவர்களை என்ன செய்வதென்றே தெரியவில்லை. கோவை பெரியார் அறிவுலகத்தில் இப்படி ஒரு முறைகேடு நடந்திருக்கிறது. இன்னும் பிறநூலகங்களில் என்னென்ன நடந்திருக்கிறதோ? ஒவ்வொன்றாக வெளியில் வரும். இதெல்லாம் அறிவுலகமா? அல்லது ஊழல் உலகமா என்று தெரியவில்லை. உங்களுடைய அண்ணன், உங்களை நல்ல வழியில் மட்டும்தான் நடத்திக் கொண்டு போவேன். தைரியமாக இருங்கள் நல்லதே நடக்கும். நல்லது மட்டுமே நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.