Rock Fort Times
Online News

வேலையில் அலட்சியம் காட்டிய 50 பேருக்கு மெமோ… * திருச்சி மாநகராட்சி கமிஷனர் பொன்மணி ஐ.ஏ.எஸ்.அதிரடி!

திருச்சி மாநகராட்சி ஆணையராக என்.பொன்மணி ஐ.ஏ.எஸ் பணியாற்றி வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் இவர் பணியேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகத்தில் எடுத்து வருகிறார். டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாத பல கட்டுமான நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து ஆரம்பத்தில் ‘திகில்’ கிளப்பினார். மாநகர பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்படும் ப்ளக்ஸ் பேனர் விஷயத்தில் எந்தவித சமரசமும் இன்றி துணிச்சலாக நடவடிக்கை எடுத்து வருகிறார். தினமும் காலை நேரங்களில் நேரடியாக ஏதாவது ஒரு வார்டுக்கு சென்று சஸ்பென்ஸ் விசிட் செய்கிறார். இதனால் கடமைக்கு வேலை பார்த்து பொழுதைக் கழிக்கலாம் என திருச்சி கார்ப்பரேஷனில் காலம் தள்ளியவர்கள் தற்போது கலக்கத்தில் உள்ளனர். இந்நிலையில் மாநகராட்சி ஊழியர்களின் செயல்பாடுகள் மற்றும் வரி வசூல் குறித்த ஆய்வுக்கூட்டம் கடந்த வாரம் மைய கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் வேலை பார்ப்பவர்கள் பங்கேற்றிருந்தனர்.அப்போது வருவாய், வரிவசூல், பொறியியல் மற்றும் கட்டுமானம், பொது சுகாதாரம், டவுன் பிளானிங், குறை தீர்க்கும் மனுக்கள், தணிக்கை மற்றும் அக்கவுண்டிங் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள ஃபைல்கள் கமிஷனர் பொன்மணியின் நேரடி ஆய்விற்கு சென்றுள்ளது. அப்போது பல கோப்புகள் உரிய பராமரிப்பு இல்லாமலும், ஏற்கெனவே மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த பணிகள் குறித்த அப்டேட் இல்லாமலும் இருந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆணையர், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் துறை ரீதியான அதிரடி நடவடிக்கைக்கு தயாராகி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் முதல் கட்டமாக திருச்சி மாநகராட்சியில் பணியாற்றும் செயற்பொறியாளர்கள், பிரிவு அலுவலர்கள், பில் கலெக்டர்கள் என சுமார் 50 பேருக்கும் அதிகமானவர்களிடம் உரிய விளக்கம் கேட்டு “மெமோ” வழங்கியுள்ளதாக தகவல். இதற்கு விளக்கமளித்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் வழங்கும் விளக்கக் கடிதங்கள் கமிஷனருக்கு திருப்தியளிக்காத பட்சத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனால் தங்களது புரொமோஷன்கள் மற்றும் ஓய்வுகால பணப்
பலன்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் மொமோக்கு உள்ளான ஊழியர்கள் பலர் அடுத்தது என்ன செய்வது எனத்தெரியாமல் ‘டரியலில்” உள்ளனராம்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்