இந்த ஆட்சி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை… கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை… * தமிழக ஆளுநரை சந்தித்த பிறகு உதயநிதி பேட்டி!
பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தமிழக வெற்றி கழக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மற்றும் மனு கொடுக்க வந்தவரை தாக்கிய சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. அர்லேகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று(26-11-2026) புகார் மனு அளித்துள்ளார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மாவட்ட ஆட்சியருக்கு தொந்தரவு கொடுத்த ஆளுங்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டும் என நேற்று திமுக தரப்பில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தோம். அவரை கைது செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது. முதலமைச்சர் இன்னும் தூக்கத்தில் இருந்து விழிக்கவில்லை. அவர் பாதிக்கப்பட்டவர்கள் பக்கத்தில் நிற்காமல் குற்றவாளிகள் அருகில் சொகுசாக படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார். இந்த ஆட்சியின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த வழக்கை உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம். தலைமை செயலாளர் 116 நாட்களாக இந்த குற்றத்தை மறைக்க முயன்று வந்திருக்கிறார். ஜூலை 31-ம் தேதியே மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ளார். எனவே தலைமை செயலாளருக்கு எல்லாம் தெரியும். அவர் ஏன் இந்த சம்பவத்தை மூடி மறைத்தார். இதை முதலமைச்சரின் கவனத்துக்கு எடுத்து சென்றாரா இல்லையா? முதல்வர் கவனத்துக்கு செல்லவில்லை என்றால் அது தலைமை செயலரின் தவறு. இந்த விவகாரம் முதல்வர் கவனத்துக்கு சென்றிருந்து நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் இந்த குற்றத்துக்கு முதல்வரும் உடந்தை தான். இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை எனக் கூறி வந்த 3 அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றார்.


Comments are closed.