Rock Fort Times
Online News

திருச்சி மலைக்கோட்டை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது… பக்தர்கள் பரவசம்! (வீடியோ இணைப்பு)

தென் கயிலாயம் என போற்றப்படும் திருச்சி, மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோவிலில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக, மேற்கு பார்த்து எழுந்தருளியுள்ளார்.

இங்கு ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தினத்தன்று, 273 அடி உயரமுள்ள மலைக்கோட்டை உச்சியில், பிள்ளையார் கோவிலுக்கு அருகில், 40 அடி உயரத்தில் உள்ள கோபுரத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். அதேபோல இந்த ஆண்டு மலைக்கோட்டை உச்சியில் மலை மீது 40 அடி உயர கோபுரத்தில் வைக்கப்பட்ட கொப்பரையில், 700 லிட்டர் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, 300 மீட்டர் பருத்தி துணியில் தயாரித்த திரியை ஊற வைத்தனர்.

இன்று காலை பரணிதீபம் ஏற்றப்பட்ட நிலையில், தாயுமானவர் சன்னதியிலிருந்து மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டு, அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டு, தாயுமானவர், மட்டுவார்
குழலம்மை உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி வாத்தியங்கள் முழங்க 273 அடி உயரமும், 417 படிகள் கொண்ட மலைக்கோட்டை தாயுமானவர் சன்னதி, உச்சி பிள்ளையார் கோவில் முன்பாக உள்ள உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கொப்பரையில் சரியாக மாலை 6 மணிக்கு வான வேடிக்கைகள் முழங்க தீபம் ஏற்றப்பட்டது.
அப்போது அங்கு திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர். இந்த மகா தீபம் தொடர்ந்து 3 நாட்கள் இரவும், பகலும் எரியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்