வருகிற 20-ம் தேதி முதல்-அமைச்சர் விஜய் திருச்சி வருகை: அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடத்தை திறந்து வைக்கிறார்…* ரோடு ஷோ செல்லவும் திட்டம்!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், வருகிற 20-ம் தேதி (வெள்ளிக்கிழமை) திருச்சி வருகிறார். இதற்காக
அன்றைய தினம் காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமானம் நிலையம் வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் திருச்சி அரசு மருத்துவமனை வரை ரோடு ஷோவாக செல்கிறார். பின்னர் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.110 கோடி செலவில் 600 படுக்கை வசதிகளுடன் 7 தளங்களுடன் கட்டப்பட்ட உயர் சிகிச்சை மைய கூடுதல் கட்டிடத்தை திறந்து வைக்கிறார். பின்னர், பச்சிளம் குழந்தைகள் வார்டுக்கு செல்லும் முதலமைச்சர், மருத்துவமனையில் பிறந்த குழந்தை களுக்கு தாய் மாமன் தங்க மோதிரம் அணிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம் பகுதி வழியாக ரோடு-ஷோ நடத்தியப்படி ரேஸ்கோர்ஸ் சாலைக்கு செல்கிறார். அங்கு தேர்வு செய்யப்படவுள்ள ஒரு இடத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதற்காக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகம், தந்தை பெரியார் அரசு கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி, தமிழ்நாடு ஓட்டல் ஆகிய இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏதாவது ஒரு இடம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த நிகழ்வுகளுக்கு பின்னர் பிற்பகல் 1 மணி அளவில் திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் புறப்பட்டு செல்கிறார். திருச்சி கிழக்கு தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ சென்று நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தருவது த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே உற்சாகத்தையும் பொதுமக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே தமிழக நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சி வந்து கட்சி நிர்வாகிகள், அமைச்சர்களுடன், முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், ரோடு ஷோ முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். முதல்வர் விஜய் திருச்சி வருகையை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Comments are closed.