முதல்வரை ஒருமையில் பேசுவதை ரசிப்பது தான் திமுகவின் அரசியல் நாகரீகமா?.. எம்.பி கனிமொழிக்கு த.வெ.க. பெண் எம்.எல்.ஏ கண்டனம்…!
சென்னையில் நடந்த திமுக முப்பெரும் விழா நிகழ்ச்சியில் எம்பி கனிமொழி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேயர் பிரியா, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் மைக் பிடித்து பேசிய திமுக பெண் நிர்வாகி ஒருவர் முதலமைச்சர் விஜயை ஒருமையில் விமர்சித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெண் நிர்வாகி பேசிய போது மேடையில் எம்.பி கனிமொழி
இருந்தார். மேலும் அந்த பேச்சை மேயர் பிரியா சிரித்தவாறே ரசித்து கேட்டுள்ளார். இந்நிகழ்வின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. தவெகவினர் பலரும் கனிமொழி, மேயர் பிரியா உள்ளிட்டோரை விமர்சித்து வருகின்றனர். இதனிடையே, முதலமைச்சர் விஜய் குறித்து தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியதாகக் கூறப்படும் புகார் தொடர்பாக, திமுகவின் சுதா தீனதயாளன் மற்றும் விழா ஏற்பாட்டாளர் முரளி ஆகியோர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கண்டனம்,
இச்சம்பவம் தொடர்பாக, கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் தவெக சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாரம்பரியக் கட்சி” என்று பெருமை பேசிக்கொள்ளும் திமுகவின் அரசியல் நாகரிகம் இதுதானா? தமிழ்நாட்டின் முதலமைச்சரைப் பொதுமேடையில் ஒருமையில் பேசுவதும், இழிவான வார்த்தைகளால் விமர்சிப்பதும், அதனைத் தடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் ரசித்துச் சிரிப்பதும் கடும் கண்டனத்திற்குரியது. ஒரு மாநகராட்சியின் மேயராகப் பொறுப்பு வகிப்பவர், இத்தகைய தருணங்களில் கண்ணியத்தையும் பொறுப்புணர்வையும் நிலைநாட்ட வேண்டாமா? முதலமைச்சர் என்ற அரசியலமைப்புச் சார்ந்த பொறுப்பில் இருப்பவரைப் பற்றிப் தொண்டர் ஒருவர் பேசும்போது குறைந்தபட்ச மரியாதையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பதைத் தனது கட்சியினருக்கு எடுத்துரைக்க வேண்டாமா? அரசியல் ரீதியாகக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கடுமையான விமர்சனங்களையும் முன்வைக்கலாம். ஆனால், தனிநபர் இழிவுபடுத்தலையும் கண்ணியமற்ற பேச்சையும் அரசியல் கொண்டாட்டமாக மாற்றுவது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அழகல்ல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.