தேவாவின் குடும்பத்தில் மற்றும் ஒரு சோகம்; இசையமைப்பாளர் மறைந்த சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் காலமானார்…!
தேனிசை தென்றல் தேவாவின் தம்பியும், இசையமைப்பாளருமான மறைந்த சபேஷின் மகனான நடிகர் கார்த்திக் சபேஷ் இன்று (அக்டோபர் 20) உடல்நலக்குறைவால் காலமானார். தேனிசைத் தென்றல் என அனைவராலும் அழைக்கப்பட்ட தேவா அக்டோபர் 17 அன்று மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவர் மறைந்த சோகத்தில் இருந்து அவரது குடும்பம் மீள்வதற்கு முன்பாகவே, இசையமைப்பாளர் தேவாவின் தம்பியான இசையமைப்பாளர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷும் (வயது 37) உடல் நலக்குறைவினால் இன்று காலமானார். கார்த்திக் சபேஷிற்கு ரம்யா கார்த்திக் என்ற மனைவியும், பிரிஷானிதாரா மற்றும் ஹைரானிதாரா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். 37 வயதில் கார்த்திக் சபேஷ் உயிரிழந்தது அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் துணை நடிகராக அறியப்பட்ட கார்த்திக் சபேஷ், பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். குறிப்பாக டம், வல்லவன், பட்டத்து யானை, குளிர் 100, உதயம் என்.ஹெச்.4, காதல் சொல்ல வந்தேன், மகாபலிபுரம் உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடிகர் கார்த்திக் சபேஷின் நடிப்பு ரசிகர்கள் இடையே பேசப்பட்டது. நடிகர் கார்த்திக் சபேஷின் உடல் திரையுலகினர் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சபேஷின் இறுதிச்சடங்கு இன்று மாலை வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் நடைபெற உள்ளதாக அவரது குடும்பத்தினர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 23-ம் தேதியன்று நடிகர் கார்த்திக் சபேஷின் தந்தையான இசையமைப்பாளர் சபேஷ் காலமானார். தந்தை மறைந்த அதே மாதத்தில், சரியாக ஒரு வருடம் கழித்து மகன் இறந்துள்ளது அந்த குடும்பத்திற்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், தேவா இறந்த சில நாட்களிலேயே, அவரது தம்பி மகனான நடிகர் கார்த்திக் சபேஷ் உயிரிழந்துள்ளது, அவரது குடும்பத்தினர் மற்றும் சினிமா ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.