மியாவாகி குறுங்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் 35-வது வார்டில் ஐயாயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி… திருச்சி மாநகராட்சி ஆணையர் பொன்மணி தொடங்கி வைத்தார்!
திருச்சி மாநகராட்சி 35வது வார்டுக்குட்பட்ட அகிலாண்டேஸ்வரி நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான 2023 சதுரடி பரப்பளவு கொண்ட இடத்தில் ஐயாயிரம் மரக்கன்றுகள் கொண்ட மியாவாகி குறுங்காடு வளர்க்கும் திட்டத்தை மாநகராட்சி ஆணையர் என். பொன்மணி ஐஏஎஸ் இன்று( அக்டோபர் 17) தொடங்கி வைத்தார். திருச்சி காவேரி மருத்துவமனை மற்றும் ரோட்டரி மாவட்டம் 3000 ஆகியவற்றின் பொதுப் பங்களிப்பு நிதியின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் 26 வகையான நிழல் தரும் மரங்கள், பூக்கும் தாவரங்கள், பழம் தரும் மரங்கள் ஆகியவை நடவு செய்யப்பட்டுள்ளன. பூங்கா வளர்க்க தேவையான பாசன வசதி, பாதுகாப்பு வேலி மற்றும் முறையான பராமரிப்பு ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளன.
இதுகுறித்து ஆணையர் என். பொன்மணி கூறுகையில், திருச்சி மாநகரின் ஐந்து மண்டலங்களிலும் உள்ள பூங்காக்கள், சாலையோர பகுதிகள், ஆற்றங்கரையோர பகுதிகள் ஆகியவற்றில் மரம் வளர்க்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதேபோல தன்னார்வலர் களின் கூட்டு முயற்சியால் இப்பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளன. வழக்கமாக வளரும் முறையை விட மியாவாகி குறுங்காடு முறையில் நாம் வளர்க்கும் மரங்கள் பத்து மடங்கு வேகமாக வளர்ந்து பசுங்காடாக உருமாறுகிறது” எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், நகர பொறியாளர் அண்ணாதுரை, உதவி ஆணையர் சுரேஷ்குமார், ஆர். அன்புச் செழியன், ரோட்டரி சங்கத்தினர், முன்னாள் உதவி ஆணையர் வைத்தியநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.