Rock Fort Times
Online News

கோவையில் பெரியார் அறிவுலகம்: “யார் திறந்தால் என்ன! திறந்து வைப்பதா பெருமை?”- மு.க.ஸ்டாலின்…!

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் நூலகம் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுரடி பரப்பளவில் 7 தளங்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் அறிவியல் மையம், பெரியார் நூலகத்தை முதலமைச்சர் விஜய் இன்று (16-10-2026) திறந்து வைக்கிறார். இந்த நிலையில், திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தன் எக்ஸ் பக்கத்தில், “பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடத்தைத் தொடர்ந்து நமது திராவிட மாடல் அரசின் மற்றுமொரு மாபெரும் திட்டம் இன்று மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. சுயமரியாதையையும், பகுத்தறிவையும் பரப்புவதையே தம் வாழ்நாள் கடமையாகக் கருதிக்கொண்டு, தமிழினத்தின் மேன்மைக்காகத் தம் இறுதிமூச்சு வரை உழைத்து ஒளிவீசிய பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பெயரிலான அறிவுலகம் இன்று கோவையில் திறக்கப்படுகிறது. மனம் மகிழ்ச்சியில் கூத்தாடுகிறது. நாம் விரைந்து செயல்பட்டு, அக்கறையோடு உருவாக்கியுள்ள அறிவுக் கோயில்தான் பெரியார் அறிவுலகம்.  இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நான் கோவைக்குச் சென்றிருந்தபோதே, பெரும்பாலான பணிகள் முடிவுற்று இருந்தன. அப்போதே இதனைத் திறந்து வைத்திடலாம் எனப் பலரும் சொன்னபோது, “அவசரம் வேண்டாம், முழுமையாகப் பணிகள் நிறைவடைந்த பின்னர் திறந்தால் போதுமானது” என்று சொன்னேன்.  யார் திறந்தால் என்ன! திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதுதானே உண்மையான பெருமை! தமிழ்நாட்டில் அந்தப் பெருமை ஆக்கசக்தியான திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே உரியது. இவை யாவும் பசுமரத்தாணி போல, தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் பதிந்திருக்கிறது. ஆனால், உள்ளங்கையால் உதயசூரியனை மறைத்துவிட முயல்வதைப் போல சில முட்டாள்தனமான செயல்களில் தற்போதைய ஆட்சியாளர்கள் ஈடுபடுவதைக் கண்டேன். பெரியார் அறிவுலகத்தின் அறிவியல் தொழில்நுட்ப அரங்கில் பிரமிட் வடிவிலான கணினி மேசையில் பொறிக்கப்பட்டுள்ள நான் முதல்வன் பெயரை மறைத்து வைத்துள்ளார்களாம். தான் முதல்வராக ஆகிவிட்ட பின்பும் கூட, ‘முதல்வன்’ என்ற சொல்லைக் கண்டால் மக்களுக்கு இந்த ஸ்டாலின் நினைவுதான் வரும் என நம் எதிரிகளே அஞ்சுகிறார்கள் என்றால், அதுதான் நமது வெற்றி! நமது நான் முதல்வன் திட்டத்தின் வெற்றி!” எனத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்