முன்னாள் குடியரசுத் தலைவரும், இந்தியாவின் ஏவுகணை நாயகருமான ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று (15.10.2026) நாடு முழுவதும் தேசிய இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. எளிய குடும்பத்தில் பிறந்து, அறிவியல் அறிஞராக உயர்ந்து, நாட்டின் மிக உயரிய பதவியான குடியரசுத் தலைவர் பதவியை வகித்த போதிலும், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது அவர் கொண்ட பற்று அனைவரையும் ஈர்க்கக்கூடியதாக இருந்தது. இந்நிலையில் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவைப் போற்றும் வகையில், தலைவர்கள் பலரும் அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி தங்களது மரியாதையை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிக்கும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கனவுகளுக்கு ஊக்கமளித்து, அவர்களின் இலட்சியப் பயணத்திற்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த ஏவுகணை நாயகன், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்தநாளில், அவர் நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன். இஸ்ரோ விஞ்ஞானி, இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர், குடியரசுத் தலைவர் எனப் பல்வேறு உயரிய பொறுப்புகளை வகித்தபோதிலும், ‘ஆசிரியர்’ என்ற அடையாளத்தையே தன் வாழ்வின் மகுடமாகக் கருதி, இறுதி மூச்சுவரை மாணவர்களின் முன்னேற்றத்திற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த அம்மாமனிதரின் எளிமை, நேர்மை, அறிவியல் சிந்தனை என்றும் போற்றுதலுக்குரியவை. ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் உயரிய சிந்தனைகளையும், தொலைநோக்குப் பார்வையையும் நம் மனதில் நிறுத்தி, வளமான மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.