Rock Fort Times
Online News

முசிறி, தொட்டியத்தில் சமுதாய வளைகாப்பு விழா.. * சட்டமன்ற உறுப்பினர் எம்.விக்னேஷ் துவக்கி வைத்தார்!

திருச்சி மாவட்டம், முசிறி மற்றும் தொட்டியத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. த.வெ.க. முசிறி சட்டமன்ற உறுப்பினர் எம். விக்னேஷ் இவ்விழாவிற்கு தலைமை வகித்து, 240 கர்ப்பிணி பெண்களுக்கு நலுங்கு வைத்து, ‘சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தினார். முன்னதாக விழாவிற்கு வருகை தந்த கர்ப்பிணிகளுக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்களுக்கு கைகளில் வளையல்களை அணிவித்து எம்.எல்.ஏ., வாழ்த்து தெரிவித்தார். விழாவில் விக்னேஷ் எம்.எல்.ஏ., பேசுகையில், மகளிர் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார், முதல்வர் விஜய். அதன் அடிப்படையில், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வேலைவாய்ப்பு, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முழுவளர்ச்சி பெற முனைப்புடன்
முதலமைச்சர் பாடுபட்டு வருகின்றார். தாய்மாமன் தங்க மோதிர திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைகளும் தமிழக வெற்றி கழகத்தில் இணைவார்கள். எனக்கு சகோதரிகள் கிடையாது. இந்த சமுதாய வளைகாப்பு விழா வாயிலாக உங்களை சகோதரியாக அடையும் பாக்கியம் என்னை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என்று பேசினார். விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பூ, பழங்கள் மற்றும் வளையல்கள், புடவை அடங்கிய சீர் வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் புளி சாதம், எலுமிச்சை சாதம் உள்ளிட்ட 5 வகை கலவை சாதங்களுடன் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள்,பொதுமக்கள்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்