மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார், எல்.முருகன்.. * களப்பணிக்கு மீண்டும் திரும்புவதாக அறிக்கை..!
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அத்துடன், தமது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை துறப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“மதிப்பிற்குரிய பிரதம மந்திரிக்கு வணக்கம். சமீபத்தில் நீங்கள் தமிழகத்தில் மேற்கொண்ட பயணம் என் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் உங்களை வரவேற்ற விதத்திலும், உங்கள் வருகை அவர்களுக்குள் ஏற்படுத்திய நம்பிக்கையிலும் நான் மிகுந்த அன்பை கண்டேன். தமிழகம் மீதான உங்கள் அர்ப்பணிப்பையும், உங்கள் மீது மக்கள் கொண்டுள்ள அன்பையும் காணும்போது நான் பெருமையும், நன்றியுணர்வும் கொண்டேன். உங்கள் தலைமையின் கீழ் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பணியாற்றியது என் வாழ்வின் மிகப்பெரிய கௌரவமாக அமைந்தது. என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு அளித்த அனைத்து பொறுப்புக்களுக்கும் மிக்க நன்றி. தேசத்திற்கும், கட்சிக்கும் பணியாற்ற இத்தனை வாய்ப்புகள் எனக்குக் கிடைக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. அவை அனைத்திற்கும் நன்றி.
2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்தும் பணிக்காக என்னை முழுமையாக அர்ப்பணிக்க விரும்புகிறேன். களப்பணிக்கு மீண்டும் திரும்பி தொண்டர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளேன். தேசம், கட்சி, கடைசியாக நான்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.