ஆந்திர மாநிலம், விஜயவாடா சென்ற தமிழக முதல்வர் விஜய், அங்குள்ள கனக துர்கா கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஆந்திர பிரதேச மாநிலம், நெல்லூரில் அமைந்துள்ள கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீர் குறித்தும், கோதாவரி – கிருஷ்ணா- காவிரி ஆகிய தென் மாநில நதிகளை இணைக்கும் திட்டம் குறித்தும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் ஆலோசனை நடத்த தமிழக முதல்வர் விஜய் இன்று(13-10-2026) ஆந்திரா சென்றுள்ளார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக விஜயவாடா விமான நிலையம் சென்ற முதல்வர் விஜய்க்கு அங்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அங்கிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள கிருஷ்ணா நதிக் கரையில் இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ள கனக துர்கா கோயிலுக்குச் சென்ற முதல்வர் விஜய்க்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் அங்கு சாமி தரிசனம் செய்தார். இதன்பின்னர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்திக்கும் முதல்வர் விஜய், பின்னர் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணைச் சந்தித்துப் பேசுகிறார். கனக துர்கா அம்மன் கோயில், சுயம்புவாக தோன்றிய சக்தி தலமாகும். அம்மன் இங்கு சுயம்பு வடிவமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த கோயில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆதி சங்கரர் இங்கு ஸ்ரீசக்கரத்தைப் பிரதிஷ்டை செய்துள்ளார். இந்தக் கோயிலில் 10 நாள்கள் தசரா திருவிழா சிறப்பாக நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிருஷ்ண நதியில் நீராடி அம்மனை வழிபடுவார்கள். இங்கு சாகம்பரி திருவிழா, வளையல் திருவிழா, பவானி தீக்ஷா உள்ளிட்ட விழாக்கள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Comments are closed.