Rock Fort Times
Online News

ஜி.பி.எஸ்.கருவி பொருத்தாத லாரிகளில் ஜல்லி, எம்-சாண்ட் ஏற்ற தடை…* இன்று முதல் அமல்..!

‘ஜி.பி.எஸ். கருவி பொருத்தாத லாரிகளில் ஜல்லி, எம் சாண்ட் ஏற்றிச்செல்ல இன்று(01-10-2026) முதல் அனுமதி இல்லை’ என்று கனிம வளத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கனிம வளங்கள் வெளி மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலுங்கானாவிற்கு கடத்தப்பட்டு வந்தது. அனுமதி இல்லாத லாரிகள் மூலம் தமிழகத்திற்கு உள்ளேயும் கனிம வளங்கள் சுரண்டப்பட்டன. இதனை தடுக்க தமிழக அரசு புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. கனிம வளங்கள் ஏற்றி செல்லும் லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதற்கான அவகாசம் நேற்று வரை கொடுக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான லாரிகளில் இன்னும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படவில்லை. அதனால் அந்த லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதுகுறித்து கனிம வளத்துறை இணை-இயக்குனர் ஆறுமுக நயினார் கூறியதாவது:-

கனிம வளங்கள் முறைகேடாக கடத்தப்படுவதை தடுக்க லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்த லாரி உரிமையாளர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது. நேற்றுடன் அந்த கால அவகாசம் நிறைவுபெற்றது. தமிழகத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் லாரிகள் கனிம வளம் ஏற்றுவதற்கு விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளன. ஆனால் இதுவரையில் 24 ஆயிரம் லாரிகளில் மட்டுமே ஜி.பி.எஸ். பொருத்தப்பட்டு உள்ளது. மீதமுள்ள லாரிகளில் உடனடியாக பொருத்தப்பட வேண்டும். இல்லையென்றால் அதனுடைய அனுமதி சீட்டு (டிரிப் ஷீட்) ரத்து செய்யப்படும். அனுமதி இல்லாமல் இனிமேல் கனிம வளங்களை லாரியில் எடுத்துச் செல்ல முடியாது. ஜி.பி.எஸ். கருவிப் பொருத்திய லாரிகளில் மட்டுமே கனிம வளங்கள் இனி ஏற்ற முடியும். மற்ற எந்த லாரிகளிலும் கருங்கற்களோ, எம்-சாண்ட், மணல் போன்றவற்றை எடுத்துச் செல்ல முடியாது. அதையும் மீறி கனிம வளங்கள் கடத்துவது பற்றி பொதுமக்கள் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

உறுதுணையாக இருப்போம்,

இதுதொடர்பாக தமிழ்நாடு மணல் லாரிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறும்போது. ‘கனிம வளங்கள் கொள்ளை அடிப்பதை தடுப்பதற்கு அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் உறுதுணையாக இருப்போம். ஜி.பி.எஸ். பொருத்தாக லாரிகளிலும் பொருத்த அறிவுரை கூறப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நீதிமன்ற உத்தரவை ஏற்று குவாரிகளிலும் கேமராக்கள் பொருத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்