Rock Fort Times
Online News

ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனத்திற்கு எதிர்ப்பு…* வருகிற 18-ம் தேதி செவிலியர்கள் போராட்டம்..!

தமிழ்நாட்டில் செவிலியர்கள் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து செப்டம்பர் 18ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என செவிலியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய தேர்வின் அடிப்படையில் அரசு மருத்துவமனைகளில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. இந்த நடைமுறையை மாற்றி தமிழ்நாடு அரசு, தற்போது மாவட்ட நிர்வாகம் மூலம் 11 மாத ஒப்பந்த முறையில் 21 ஆயிரம் மாத ஊதியத்தில் தற்காலிகமாக செவிலியர்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளது. இதன்மூலம் 4,724 செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா காலத்தில் பணி அமர்த்தப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்கவும், நிரந்தர முறையில் செவிலியர்களை பணியமர்த்தவும் சங்கம் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தியது. அதனைத் தொடர்ந்து தற்காலிக பணியமர்வு அரசாணையை ரத்து செய்து ஏற்கனவே இருந்த நடைமுறையை பின்பற்ற கோரி வருகிற 18ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தப்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்