தமிழ் அறிஞரும், பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக நேற்று (11-09-2026) காலமானார். தனது நகைச்சுவையான பேச்சு மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றவர். அவரது மறைவு தமிழ் சமுதாயத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். மேலும், அவரது உடலுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், தன்னோடு பட்டிமன்றத்தில் பணியாற்றிய பேச்சாளர்கள், ஊர் பொதுமக்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அமைச்சர்கள் நிர்மல் குமார், விஸ்வநாதன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சாலமன் பாப்பையாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு மதுரை வெப் மெமோரியல் தேவாலயத்தில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்றது. துப்பாக்கி குண்டுகள் முழக்கம் இல்லாமல் சாலமன் பாப்பையா உடலுக்கு கௌரவ மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து மின் மயானத்தில் சாலமன் பாப்பையாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Comments are closed.