Rock Fort Times
Online News

திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திடீர் விலகல்…!

அடிப்படை உறுப்பினர் உள்பட திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு அதிமுகவில் இருந்து விலகிய அவர், திமுகவில் ஐக்கியமானார். அவருக்கு திமுகவின் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. இவர், சட்டசபை தேர்தலில் பெருந்துறை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அண்மையில்,
ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து தோப்பு வெங்கடாசலம் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் திமுகவிலிருந்து விலகி உள்ளார். திமுகவில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “திமுக தலைவர் ஸ்டாலின், என் மீது நம்பிக்கை வைத்து மாவட்ட கழக பொறுப்பாளராகவும், பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராகவும் அறிவித்ததற்கு நன்றி. ஆனால் நான் மாவட்டச் செயலாளராக செயல்படுவதற்கும் சட்டப்பேரவை தேர்தலில் எனக்கும், என்னுடன் பணியாற்றியவர்களுக்கும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இனிமேலும், என்னால் திமுகவில் பயணிக்க முடியாத காரணத்தால் எனது அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன். பிற கட்சிகளில் சேரும் எண்ணம் இதுவரை இல்லை. எனது ஆதரவாளர்களிடம் கலந்தாலோசித்து அடுத்த கட்ட முடிவு குறித்து அறிவிப்பேன்” என்று கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்