திபெத்திய எல்லையில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவினால், போட்டே கோஷி மற்றும் திரிசூலி ஆகிய ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எல்லையில் தொடங்கி, நேபாளின் மத்திய பகுதி வரை இடைவிடாமல் வேகமாக வந்த காற்றாற்று வெள்ளம் வழியில் உள்ள அனைத்தையும் அடித்து புரட்டிப்போட்டது. இதில், பெரும் மண் மற்றும் பாறை கழிவுகளுடன் அடித்து வரப்பட்ட வெள்ளத்தில் சிக்கி தற்போதைய நிலவரப்படி, 469 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மாயமான ஆயிரக்காணவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேபாளத்திற்கு இந்தியா உட்பட பல நாடுகளின் இருந்து சுற்றுலா வந்தவர்களின் நிலை என்னவென்று தெரியாத நிலை உள்ளது. தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள ஏஜென்சி மூலம் நேபாள கைலாஷ் யாத்திரை சென்ற 57 பேரில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் மற்றும் சென்னையில் இருந்து சென்றவர்களின் நிலை என்ன என்று தற்போது வரை தெரியவில்லை.
நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர முதல்வர் விஜய் அவசர ஆலோசனை நடத்தியதுடன், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத் மற்றும் தென்னரசு , தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி வெங்கட்நாராயணா, ஜெயா ஐஏஎஸ் மற்றும் புலம்பெயர் தமிழர் நல ஆணையர் சதீஷ் ஐஏஎஸ் ஆகியோர் அடங்கிய குழுவை டெல்லிக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் தமிழர்களை தமிழகத்திற்கு அழைத்து வரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் கட்டமாக நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்ட 21 தமிழர்கள் காத்மாண்டுவில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். அவர்களை விமான நிலையத்தில் சந்தித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார். அவர்களை டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை அனுப்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

Comments are closed.