Rock Fort Times
Online News

மேட்டூர் அணையில் இருந்து வருகிற 28ம் தேதி தண்ணீர் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்?* பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

மேட்டூர் அணை தண்ணீர் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், அரியலூர் உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதற்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் விவசாய பணிகளுக்கு நீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டன. இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். தற்போது பருவமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை நிரம்பி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று(26-08-2026) காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 88.84 அடியாக உயர்ந்துள்ளது. நாளை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நாளை மறுநாள்( 28ம் தேதி) மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக முதல்வர் விஜய், முதல் முறையாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்கிறார்.
சேலத்திற்கு முதல்வர் விஜய் வருகையை முன்னிட்டு ஆயத்த பணிகளில் நீர்வளத்துறையினரும், காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர். மேட்டூர் அணையின் வலது கரையில் மேல்மட்ட மதகு பகுதியில் மின்விசை அமைக்கும் பணி, பந்தல் அமைக்கும் பணி ஆகியவற்றை நீர்வளத்துறை செய்து வருகின்றன. மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ரம்யா பாரதி தலைமையில் காவல் அதிகாரிகள், மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்