பழனியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத் திறப்பு விழா இன்று (ஆகஸ்ட் 3) நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது அதிமுக தலைமை தங்களுக்கு வழங்கிய புதிய கட்சிப் பதவிகளைத் திட்டவட்டமாகப் புறக்கணிப்பதாக அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், “கழகப் பொதுச்செயலாளர் எங்களுக்குப் புதிய பொறுப்புகளை அறிவித்தார் . ஆனால், இந்த அறிவிப்பு வெளியான அன்றே, எனக்கும் நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்ட சுமார் 10 பேருக்கு இந்தப் பதவிகளில் உடன்பாடு இல்லை. எங்களுக்கு இந்தத் புதிய பதவிகள் எதுவும் வேண்டாம் என்று தெளிவான கடிதத்தைத் தலைமைக்கு அப்போதே அனுப்பி விட்டோம். நாங்கள் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தும், ஜெயலலிதா காலத்திலிருந்தும் கட்சிக்காக இரவும், பகலும் உழைத்தவர்கள். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், பொதுச்செயலாளராகவும் வருவதற்கு முழுமையாகப் பாடுபட்டோம். குறிப்பாக சி.வி.சண்முகம் கட்சிப் பொதுக்குழுவிற்காக எத்தனை வழக்குகளை எதிர்கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும். எங்களுக்குப் பதவி ஆசை இல்லை, கட்சியின் சாதாரண உறுப்பினர்களாகவே நீடிக்க விரும்புகிறோம். முன்பு ஜானகி-ஜெயலலிதா அணி பிரிந்தபோதும், ஓபிஎஸ் பிரிந்தபோதும் பழைய பதவிகள் அப்படியே தொடரும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. தேர்தல் தோல்விகள் குறித்து விவாதிக்கப் பொதுக்குழுவைக் கூட்டி முறையான ஆய்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும். எந்தவொரு முக்கிய முடிவையும் எடுக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட வேண்டும். அதேபோல் கட்சியை பலப்படுத்த சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும்” என்றார். மூத்த முன்னாள் அமைச்சர்கள் ஈபிஎஸ்-க்கு எதிராக தங்களது பதவிகளைத் துறந்துள்ள இச்சம்பவம் தமிழக அரசியலிலும், அதிமுக வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.