மணப்பாறை அருகே வேன் மோதியதில் 50 அடி தூரத்துக்கு இழுத்துச் சொல்லப்பட்ட இருசக்கர வாகனம்: மனைவி பலி, கணவர் படுகாயம்…!
திருச்சி, எரங்குடியைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 44). இவரது மனைவி வசந்தி (42). இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளனர். அண்மையில் சொந்த ஊர் திரும்பிய அவர்கள் இன்று(ஆகஸ்ட் 3) காலை எரங்குடியில் இருந்து திண்டுக்கல்லில் உள்ள தங்களது உறவினரை பார்த்துவிட்டு திருப்பூர் செல்வதற்காக இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வடக்குஅம்மாபட்டி பிரிவு சாலை அருகே அவர்கள் சென்று கொண்டிருந்த போது பின்னால் ராமநாதபுரத்தில் இருந்து கேரளா நோக்கி ஐஸ் ஏற்றி சென்ற வேன் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதியது. இதில் அந்த வேனில் சிக்கிக்கொண்ட இரு சக்கர வாகனம் சுமார் 50 அடி தூரத்திற்கு இழுத்துச் சென்றது. இதில் படுகாயமடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கருப்பையா மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.