சென்னையை சேர்ந்த ஸ்ரீராம், ராஜமேரி, ரஞ்சனா உள்ளிட்ட 6 பேர் ஒரே காரில் கோவில்பட்டியில் நடக்கும் விசேஷம் ஒன்றுக்காக ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். இன்று ( ஆகஸ்ட்3) அதிகாலை மேலூர் அருகே தும்பை பட்டி மேம்பாலத்தில் வந்தபோது காருக்கு முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் அந்தக் கார் மோதி, சாலையின் தாழ்வான தடுப்புச் சுவரைத் தாண்டி எதிர் திசைக்கு சென்றது. அப்போது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த மற்றொரு கார் மீது மோதியதில் இரண்டு கார்களும் சுக்கு நூறாக நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் காரை ஓட்டிய ஸ்ரீராம், அதில் பயணித்த ராஜமேரி, ரஞ்சனா மற்றும் ஒன்றரை வயது பெண் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மற்றொரு கார் ஓட்டுநர் பிரகாஷ் மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களும் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த மேலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.