மழை வேண்டி திருச்சியில் இஸ்லாமியர்கள் கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை – ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…!
திருச்சி, தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இணைந்து மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்தினர். எல் நினோ தாக்கத்தால் உலகம் முழுவதும் பல பகுதிகளில் வரலாறு காணாத அளவில் கடும் வெப்பம், மழை, வறட்சி ஆகியவை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கோடைக்காலத்தில் வெயில் சுட்டெரித்து, வெப்பம் வாட்டி வதைத்தது. இதனால் சுமார் 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெயில் பதிவாகின. கோடை காலம் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் காவிரி உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன.
இதனைக் கருத்தில் கொண்டு திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில், திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜமாஅத்துல் உலமாசபை தலைவர் முஹம்மது ரூருல் ஹக் ரஷாதி மற்றும் செயலாளர் இன் ஆமுல் ஹசன் ஹஜ்ரத் தலைமையில் நடைபெற்ற இந்த தொழுகையில், 1000-க்கும் மேற்பட்ட உலமாக்கள், ஆலிம்கள் மற்றும் இஸ்லாமிய மக்கள் பங்கேற்று தமிழ்நாட்டில் மழை பெய்து வளம் பெருக வேண்டி முகமது நபி வழியில் சிறப்புப் பிராத்தனை நடத்தினர். இவ்வாறு தொழுகை செய்வதன் மூலம் இறைவன் நிச்சயம் மழைபொழியச் செய்வார் என்ற நம்பிக்கையில், தங்கள் கைகளை உயர்த்தி, கண்ணீர் மல்க அனைவருக்காகவும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Comments are closed.