Rock Fort Times
Online News

பிற மாநிலங்களுக்கு ஜல்லி, எம்.சாண்ட் கொண்டு செல்ல தடை…* தமிழக அரசு அதிரடி..! 

தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானம் சார்ந்த கனிம வளங்கள் கொண்டு செல்ல தமிழக அரசு 3 மாதங்களுக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. தமிழ்நாடு சட்டவிரோத சுரங்கத் தோண்டல் கனிமங்கள் போக்குவரத்து மற்றும் சேமிப்பு தடுப்பு விதிகள் 2011ல் அண்மையில் செய்யப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில் பிற மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்வதை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் புவியியல் மற்றும் சுரங்க துறை இயக்குனருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரத்தின் கீழ் பிற மாநிலங்களுக்கு கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனரின் உத்தரவில், தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு அதிக அளவில் ரஃப் ஸ்டோன் மற்றும் கட்டுமான கற்கள் கொண்டு செல்லப்படுவதால் மாநிலத்திற்குள் கட்டுமான பொருட்கள் பற்றாக்குறை ஏற்படுவதோடு அதன் விலையும் உயர்கிறது. மேலும், எல்லைப் பகுதிகளில் கனரக லாரிகளின் போக்குவரத்தால் சாலைகள் சேதம் அடைவதுடன் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. தமிழ்நாட்டின் உள் கட்டமைப்பு வீடமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சிக்கு தேவையான கட்டுமான பொருட்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், மாநிலத்தில் செயல்பட்டு வரும் குவாரிகளில் இருந்து கிடைக்கும் உற்பத்தி அந்த தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை. அதிகப்படியான தேவையால் சட்டவிரோத குவாரி செயல்பாடுகள், அனுமதிக்கப்பட்ட ஆழத்தை மீறிய சுரங்கத் தோண்டல், சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் உருவாகும் அபாயமும் உள்ளது.

இதையடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளை தவிர்த்து பிற மாநிலங்களுக்கு ரப் ஸ்டோன், ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட கற்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவை மீறுவோர் மீது நடைமுறையில் உள்ள சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்