Rock Fort Times
Online News

கரூர் சம்பவம்: 31 பேருக்கு முதல்வர் விஜய் வழங்கிய அரசு பணிக்கான அரசாணை ரத்து…* உயர்நீதிமன்றம் அதிரடி..!

கரூரில், தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டது. இதற்கு எதிராக நாம் தமிழர் கட்சி தீரன் திருமுருகன், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சீனி அகமது உட்பட 3 பேர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில், ‘கரூர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையை உச்ச நீதிமன்றம் நியமித்த குழு கண்காணித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது விசாரணையை பாதிக்கச் செய்யும். இது கரூர் சம்பவத்தின் சாட்சிகளை கலைக்கும் நடவடிக்கையாகும். தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் மக்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படவில்லை. இதனால் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்குவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். எனவே சிபிஐ விசாரணை, உச்ச நீதிமன்ற விசாரணை முடியும் வரை அரசு வேலை வழங்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த மனுக்கள் நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வில் இன்று (ஜூலை 27) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், ‘காவல் துறை சரியாக கையாளாததால் கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உயிரிழந்த 41 பேர் மீதும் எந்த தவறும் இல்லை. அவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்கியது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டுள்ளது என்று வாதிடப்பட்டது. பின்னர் நீதிபதிகள், “கருணை பணி வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் கரூர் நெரிசலில் சிக்கியவர்களுக்கு அரசு பணி வழங்கியதில் பின்பற்றப்படவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சாதாரண பணி தான் வழங்கியதாக கூறுவதை ஏற்க முடியாது. எனவே கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கி பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது” என உத்தரவிட்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்