தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான தி.மு.க.வைச் சேர்ந்த மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை பார்ப்பதற்காக தி.மு.க. இளைஞரணி செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ இன்று(27-07-2026) மத்திய சிறைக்கு வருகை தந்தார். அப்போது அவருடன் முன்னாள் அவைத் தலைவர்கள் ஆவுடையப்பன், அப்பாவு, முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் மற்றும் அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறைக்குள் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை சந்தித்து நலம் விசாரித்தனர். இந்த நிகழ்வின் போது சிறை வாயிலில் உதயநிதி ஸ்டாலினை வரவேற்பதற்காக ஆயிரக்கணக்கான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு வந்து கோஷங்கள் எழுப்பினர். இதன் காரணமாக சிறைச்சாலை முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. சிறையில் அடைக்கப்பட்ட மார்க்கண்டேயன் எம்எல்ஏ வை திமுக நிர்வாகிகள் யாரும் சந்தித்து பேசவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தச் சந்திப்பு அமைந்துள்ளது.

Comments are closed.