பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 1.4 ஏக்கர் நிலத்தை வெறும் 2 கோடிக்கு கிரயம் செய்துள்ளனர். இந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் கோயில் சொத்து என்பதை மறைத்து தனிநபர்களுக்கு கிரயம் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த மோசடிக்கு உறுதுணையாக இருந்த பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகிய 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த முறைகேடு தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். இந்த நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று (17-07-2026) நீதிபதி ராஜசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களுக்கு பிறகு நீதிபதி, இந்த விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை சிபிசிஐடி போலீசார் தெளிவாக விசாரணை நடத்தி அதற்கான இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை ஜஸ்டின் மணிகண்டனுக்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கப்படுகிறது.
ஜூலை 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஜஸ்டின் மணிகண்டன் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Comments are closed.