நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), ஜெயக்குமார் (பெருந்துறை), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்மாசமுத்திரம்) ஆகிய 6 பேர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். அவர்களிடம் குதிரை பேரம் நடத்தி
தவெக அரசு, தங்களது கட்சியில் இணைத்துக் கொண்டதாக அதிமுக குற்றம் சாட்டி வருகிறது. இதுதொடர்பாக சபாநாயகரிடமும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (ஜூலை 17) குதிரை பேரம் விவகாரம் தொடர்பாக, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இன்பதுரை எம்.பி ஆகியோர் டிஜிபியிடம் புகார் மனு அளித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, “குதிரைபேர நிகழ்வுகளை தடுக்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளோம். லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்காததால் டிஜிபியிடம் மீண்டும் புகார் மனு கொடுத்துள்ளோம். தவெக அரசு 6 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிவிட்டது. எம்எல்ஏக்கள் பதவி விலகல் செய்த உடனே தவெக உறுப்பினர் அட்டை வழங்கப்படுகிறது.அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் யாரும் செல்லவில்லை. தவெக அரசால் விலை பேசபட்ட 6 சட்டமன்ற உறுப்பினர்கள்தான் சென்றிருக்கிறார்கள். ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள குதிரை பேரம் நடக்கவில்லை என சொல்கிறார்கள். அதிமுகவில் எந்த உட்கட்சி பிரச்சினையும் இல்லை. திமுகவோடு எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை” என்றார்.

Comments are closed.