வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் இன்று (16.07.2026) காலை 10-30 மணிக்கு தமிழக அமைச்சரவையின் 2வது கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் த.வெ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மக்களுக்கு அளித்த முக்கிய வாக்குறுதிகளை முதற்கட்டமாகச் செயல்படுத்துவது, அதற்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் புதிய மக்கள் நலத்திட்டங்களை அறிவிப்பது குறித்தும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் விரிவான ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். மேலும், துறை வாரியான செயல்திறனை மேம்படுத்துவது மற்றும் மாநிலத்தின் பல்வேறு முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு தமிழக பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்க உள்ள நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் முன்மொழிவுகளுக்கும் அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று பல்வேறு துறைகளின் ஆய்வு கூட்டங்களில் எடுக்கப்பட்ட பரிந்துரைகள் குறித்தும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் இறுதி முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

Comments are closed.