திருச்சி மாவட்டம் துறையூா் தாலுகாவில் செம்மண் கடத்தியவர்களை தடுத்தபோது வருவாய் ஆய்வாளா் பிரபாகரனை நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவா் உள்ளிட்ட 4 பேர் கல்லால் அடித்து கொலை செய்ய முயற்சி செய்தனர். இது தொடர்பாக துறையூர் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 4 பேரை கைது செய்தனர். வருவாய் ஆய்வாளரை தாக்கிய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், சம்பந்தப்பட்டவர்களை குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், அரசு ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்யவும், தங்கள் பாதுகாப்புக்கு கை துப்பாக்கி கேட்டும் தமிழ்நாடு வருவாய்த்துறை (குரூப்-2) நேரடி நியமன அலுவலா்கள் சங்கம் சார்பில் நேற்று ( 29.05.2023 ) மாலை திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் சக்திவேல் முருகன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ஷேக் முஜீப், பொருளாளர் ஜாபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த்துறை அனைத்து சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் அனைத்து வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். முன்னதாக தலைமை நிலைய செயலாளர் சிவனேசன் வரவேற்று பேசினார். முடிவில் இணைச் செயலாளர் யோகராஜன் நன்றி கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.