Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுர பணிகள் விரைந்து முடிக்கப்படும்… அமைச்சர் ரமேஷ் உறுதி!

ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் பகுதி மக்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெறும் முகாம் இன்று (ஜூலை 7) நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவின்படி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நேரடியாக மக்களைச் சந்தித்து குறைகளை கேட்டு உடனடி தீர்வு காணும் வகையில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் பகுதிகளில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்கள் நடைபெற்றது. மக்கள் அளிக்கும் மனுக்களில் பெரும்பாலானவை குடிநீர், தெருவிளக்கு, கால்வாய் சீரமைப்பு, வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி, ஓய்வூதியம், உரிமைத்தொகை போன்ற அடிப்படை தேவைகள் தொடர்புடையதாகவே இருக்கின்றன. அவற்றுக்கு அரசின் வழக்கமான திட்டங்களின் மூலம் நிதி ஒதுக்கி தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு கோபுர வாசல் திறப்புப் பணிகளில் இருந்த தாமதம் சரி செய்யப்பட்டு, விரைவில் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு திறக்கப்படும். திருச்செந்தூர் கோயிலில் எந்த கட்டண உயர்வும் அமல்படுத்தப்படவில்லை, பொதுமக்களின் கருத்தின் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்படும். மக்கள் விரும்பாத எந்த திட்டமும் அமல்படுத்தப்பட மாட்டாது. விஐபி தரிசன முறையை அனைத்து கோயில்களிலும் ஒழுங்குபடுத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஸ்ரீரங்கம் கோயிலில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் முன்பதிவு மோசடி தொடர்பாக தானே காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அதிகாரப்பூர்வ ஆன்லைன் முன்பதிவு இணையதளத்தை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக
தெரிவித்தார்.
*

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்