நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோல்வியை சந்தித்தது. மேலும், பல தொகுதிகளில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதற்கு அதிமுக தலைமை எடுத்த தவறான முடிவே காரணம் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரு தரப்பினர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். மேலும் எஸ்.பி. வேலுமணி தரப்பினர், முதல்வர் விஜய் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். இதனால், விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்த சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன. பின்னர், அவர்கள் ஒன்றிணைந்தனர். இருந்தாலும் அதிமுக தலைமை மீது அதிருப்தி அடைந்த மரகதம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா, ஜெயக்குமார் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். அவர்களைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள்
சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். கட்சியில் இருந்தும் விலகிக் கொள்வதாக தலைமைக் கழகத்திற்கு கடிதம் அனுப்பினர். இந்தநிலையில் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நாளை (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அவர்கள் இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நாளை காலை 9 மணிக்கு நடைபெறும் இணைப்பு விழாவில் முதல்வர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தில் அவர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
Next Post

Comments are closed.