சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜமால் முகமது கல்லூரி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைபெற்றது. இந்நிகழ்வினைக் கல்லூரியின் செயலர், தாளாளர் அ. கா. காஜா நஜீமுதீன், பொருளாளர் எம்.ஜே. ஜமால் முகமது, உதவிச் செயலர் க.அப்துஸ் சமது, நிர்வாகக் குழு உறுப்பினர் மற்றும் மதிப்புறு இயக்குநர் கா. ந. அப்துல் காதர் நிஹால் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முன்னதாக கல்லூரியின் முதல்வர் இர. ஜாஹிர் ஹுசைன் தலைமையுரையாற்றி விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களைப் பொது மக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் துணை முதல்வர், கூடுதல் துணை முதல்வர்கள், பகுதி – V ன் ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர்கள், 100 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வின் தொடக்கமாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் எஸ்.எஸ்.சையது அபுதாஹீர் அனைவரையும் வரவேற்றார். இறுதியாக போதை ஒழிப்போர் சங்க ஆலோசகர் பேராசிரியர் எம்.ஏ.ஜமால் முகமது யாசீன் ஜுபைர் நன்றி கூறினார். போதை ஒழிப்பு சங்க மாணவர்களும், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுமாக 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் டி.வி.எஸ். டோல்கேட்டிலுள்ள புதுக்கோட்டை பேருந்து நிறுத்தம், தஞ்சாவூர் பேருந்து நிறுத்தம், மத்திய பேருந்து நிலையம் செல்வதற்கான பேருந்து நிறுத்தம், மன்னார்புரம் பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் போதைப் பொருள் எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வுப் பாடல்களைப் பாடியும், விழிப்புணர்வு தெரு நாடகங்களை நடித்துக் காட்டியும், பதாகைகளைக் கையில் ஏந்திய வண்ணம் விழிப்புணர்வுத் வாசகங்களை எடுத்துக் கூறியும் பொது மக்களிடம் போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதோடு பொது மக்களையும் இணைத்துப் போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டனர்.


Comments are closed.