தமிழ் திரையுலகின் ‘திரைக்கதை மன்னன்’ என்று போற்றப்படும் பிரபல இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் (வயது 73), இன்று (ஜூன் 27 ) காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது உடலுக்கு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாக்யராஜ் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். முன்னதாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ‘ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்! இந்திய சினிமாவில் முடிசூடா திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்தி விடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய இயக்குநராக வலம் வந்தவர் பாக்யராஜ். தன்னைப் போலவே மேலும் பலரை இயக்குநர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர். சில மாதங்களுக்கு முன்புதான், பாக்யராஜ் திரையுலகில் 50 ஆண்டுகாலத்தை நிறைவு செய்வதற்கான விழாவில் கலந்துகொண்டு, முதலமைச்சராக மட்டுமின்றி, அவரது ரசிகனாகவும் அந்த விழாவில் பேசியிருந்தேன். அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன. திரைத்துறையில் இன்னும் பல ஆண்டுகள் பங்களிக்கும் வாய்ப்பையும் ஆற்றலையும் பெற்றிருந்த அவர் தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டு விட்டது பெரும் இழப்பு. அவரை இழந்து தவிக்கும் பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, சரண்யா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். தமது படைப்புகளால் பாக்யராஜ் என்றென்றும் தமிழ்நாட்டு மக்களின் பிரிக்க முடியாத அங்கமாகத் தொடர்ந்து வாழ்வார்’ என தெரிவித்துள்ளார்.

Comments are closed.