Rock Fort Times
Online News

திருச்சியில் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் கையும், களமாக சிக்கினார்…!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் யூனியனுக்கு உட்பட்ட பனையக்குறிச்சி ஊராட்சி அலுவலகத்தில், லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த விவரம் வருமாறு:-
பனையக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், தனது மைத்துனர் அருண்குமார் என்பவருக்குச் சொந்தமான கிருஷ்ணா கார்டன் – ஏ.ஆர்.கே.நகரில் உள்ள புதிய வீட்டிற்கு வரி நிர்ணயம் செய்வதற்காக, பனையக்குறிச்சி ஊராட்சி செயலர் மாரியப்பனை அணுகியுள்ளார். இந்த வேலையை செய்து தருவதற்கு மாரியப்பன், கார்த்திகேயனிடம் ரூ.25,000 லஞ்சம் கேட்டுள்ளார். பேச்சுவார்த்தைக்கு பிறகு ரூ.15,000 கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கார்த்திகேயன் இதுகுறித்து, திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையில், ஆய்வாளர்கள் பிரசன்ன வெங்கடேஷ், சக்திவேல் மற்றும் காவல் குழுவினர் அடங்கிய சிறப்புக் குழுவினர் பொறி வைத்தனர். அதன்படி, இன்று (23.06.2026) பனையக்குறிச்சி ஊராட்சி அலுவலகத்தில் வைத்து, கார்த்திகேயனிடமிருந்து ரூ.15,000 லஞ்சப் பணத்தைப் பெற்றபோது, மாரியப்பனை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பாய்ந்து சென்று கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை பனையக்குறிச்சி ஊராட்சி அலுவலகத்தில் வைத்து, அவரிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரசுப் பணியில் இருப்பவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் லஞ்சம் வாங்க கூடாது என முதல்வர் விஜய் கண்டிப்பாக உத்தரவிட்டு உள்ளார். அதனையும் மீறி லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்