புதிய சட்ட விதிப்படி எஸ்.எஸ்.ஐக்களும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம்…* பயிற்சி வகுப்பில் வழக்கறிஞர் ஜெ.காஜா மொய்தீன் விளக்கம்..!
இந்தியாவில் குற்றச்சம்பவங்கள் நடைபெறும் போது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அது குறித்து வழக்கு விசாரணை நடத்தவும், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோருக்கே பழைய விதிமுறைப்படி அதிகாரம் இருந்தது. ஆனால், தற்போது நடைமுறையில் உள்ள புதிய இந்திய குற்றவியல் சட்டமான பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா ( BNSS ) சட்டத்தின்படி, காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரியாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் செயல்படும் பட்சத்தில், அவர் வழக்கு குறித்து புலனாய்வு விசாரணை முடித்து அதுகுறித்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்டத்தில் பணியாற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்களுக்கான பயிற்சி, மாவட்ட காவல் துறை சார்பாக கடந்த ஒரு வாரமாக சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாநகர ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மதியம் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்புகளில்
பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்புடைய வழக்குகளில் எப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட நடைமுறை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று (ஜூன் 19) பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் குற்றங்கள் குறித்து எப்படி வழக்கு விசாரணை மேற்கொண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் திருச்சி மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் ஜெ.காஜா மொய்தீன் கலந்து கொண்டு இது குறித்து விளக்கி பேசினார். இதில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றும் தலைமை காவலர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.