Rock Fort Times
Online News

‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற தமிழக ராணுவ வீரருக்கு அரசு சார்பில் ரூ.48 லட்சம்…* முதல்வர் விஜய் வழங்கினார் !

கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்தின் அசாத்திய வீரத்தைப் பாராட்டி தமிழக அரசின் சார்பில் ரூ.48 லட்சத்திற்கான காசோலையை தமிழக முதல்வர் விஜய் வழங்கினார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக முதல்வர் விஜய் இன்று (ஜூன் 15) தலைமைச் செயலகத்தில், இந்திய அரசின் “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்துக்கு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெளிப்படுத்திய அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி தமிழக அரசின் சார்பில் 48 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இந்திய ராணுவத்தின் பீரங்கிப் படைப் பிரிவில் பணியாற்றி வரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் டிசம்பர் 19, 2024 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள குல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது, பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் முகம் மற்றும் தோள் பட்டையில் பலத்த காயம் அடைந்த நிலையிலும், தனது கடமையில் இருந்து தவறாமல் தொடர்ந்து போராடி, பயங்கரவாதிகளை வீழ்த்தினார். அவரது அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான கீர்த்தி சக்ரா விருதினை இந்தியக் குடியரசுத் தலைவர் கடந்த ஜூன் 8-ம் தேதி அன்று புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கிச் சிறப்பித்தார். உயரிய விருதான “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்துக்கு, தமிழக முதல்வர் தமிழக அரசின் சார்பில் 48 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்