பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? “த.வெ.க.விற்கு ஏன் தான் ஓட்டு போட்டோமோ”? என்று மக்கள் வருந்தும் நிலை தான் தற்போது உள்ளது…* திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ஆறு மாதம் கூட விமர்சனம் செய்யாமல் இருக்கும் மாதிரி இந்த ஆட்சி நடக்குமா?” என்று, ஏற்கெனவே நான் கலந்து கொண்ட சில நிகழ்ச்சிகளில் பேசினேன். உடனே, அதை உண்மைக்கு மாறாகத் திரித்து, “ஆட்சியைக் கவிழ்க்க சதியா?” என்று கேட்டு நமது எதிரிகள் அழ ஆரம்பித்து விட்டார்கள். நான் ஏற்கெனவே நிறைய முறை சொல்லிவிட்டேன். இன்னொரு முறையும் இந்தக் கூட்டத்தில் நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். தி.மு.க பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாகத் தன்னுடைய கடமையை உறுதியாகச் செய்யும். இந்த ஆட்சியின் தோல்விகளை நாம் தொடர்ந்து சுட்டிக் காட்டுவோம்; கேள்விகளைப் கேட்போம். அடுத்து எப்போது தேர்தல் நடந்தாலும் மக்களே இந்த ஆட்சியை அகற்றுவார்கள். இப்போது மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று, நீங்களே சோஷியல் மீடியாவில் நிறைய வீடியோக்களைப் பார்த்திருப்பீர்கள். நாள்தோறும் நடைபெறும் குற்றச்சம்பவங்கள், சென்னையையும் பல ஊர்களையும் இருட்டில் மூழ்கடிக்கிற மின்வெட்டு, விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி என்று நடந்த நாடகம் என்று இப்படிப் பலதரப்பட்ட மக்களும், “ஏன்டா இந்த ஆட்சிக்கு வாக்களித்தோம்” என்று கோபமாக, ஆவேசமாக, வருந்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஓட்டு போட்டவர்களும் வருத்தப்படுகிறார்கள்; ஓட்டு போடாதவர்களும் வருத்தப்படுகிறார்கள். அதுதான் இப்போது இருக்கும் நிலை. எனக்கு முன்பு பேசிய கனிமொழி சொன்னார்கள், சமீபத்தில் ஸ்ரீவைகுண்டத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த பெண்ணுக்கு, அந்தக் கட்சியினரே பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்கள். இதுபற்றி இரண்டு அமைச்சர்களிடம் முறையிட்டும் நீதி கிடைக்கவில்லை. நேற்று கூட, ஆலந்தூரிலும், சேலத்திலும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த நபர்களே பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாகச் செய்திகள் வந்தன. தேர்தலுக்கு முன்பு இன்றைக்கு இருக்கும் முதல்வர் பேசிய அனைத்துக் கூட்டங்களிலும் பெண்கள் பாதுகாப்பு பற்றித்தான் தொடர்ந்து பேசினார். இன்னொன்றும் சொன்னார். “எங்கு நல்ல விஷயம் நடந்தாலும் அது நம்ம பசங்கதான் செய்ததாக இருக்க வேண்டும்” என்று சொன்னார். ஆனால் இன்றைய நிலை என்ன?. தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றச்செயல்களில் த.வெ.க. நிர்வாகிகள் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பிரச்சாரத்தில் பேசும்போது, “த.வெ.க. ஆட்சி பாதுகாப்பு கொடுக்கும்” என்று சொன்னார்கள். ஆனால், இப்போது த.வெ.க.விடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று மக்கள் கேட்கிற நிலைக்கு இன்றைக்குத் தமிழ்நாடு இருக்கிறது.
இப்போது நம்முடைய முதல்வர் என்ன செய்கிறார் தெரியுமா? அ.தி.மு.க. எம்எல்ஏ-க்களை ‘ஷாப்பிங்’ செய்து கொண்டிருக்கிறார். நமக்கு என்ன சந்தேகம் என்றால், அவர் ஆட்சி மீது அவருக்கே நம்பிக்கை இல்லையா அல்லது அவருக்கு ஆதரவு கொடுத்திருக்கிற மற்ற கட்சிகள் மீது நம்பிக்கை இல்லையா? முதலில் அவர் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள அ.தி.மு.க. எம்எல்ஏ-க்களை த.வெ.க.வுக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்தார். இப்போது, அவர்களை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, அடுத்த நொடியே தன்னுடைய கட்சியில் இணைத்திருக்கிறார். ஒரே மாதத்தில் எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் சேர்கிறார்களே, அந்தளவுக்கு அப்படி என்ன ஆஃபர் த.வெ.க.வில் கிடைத்திருக்கும் என்று பேச வேண்டுமா? வேண்டாமா? ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குகிற அசிங்கமான ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது. கரூர் சி.பி.ஐ. வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் நீங்கள் டெல்லிக்குச் சென்றீர்களா? பா.ஜ.க.வை உறுதியாக விமர்சித்துப் பேசினால் உங்கள் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்று பயப்படுகிறீர்களா? இந்தக் கேள்வியையெல்லாம் கேட்டு, ஒரு முதல்வராக நீங்கள் அரசுக் கூட்டத்தில் கலந்துகொண்டதை உங்களைப் மாதிரி நான் தரம் தாழ்ந்து விமர்சிக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.