Rock Fort Times
Online News

தவெக அரசுக்கு எதிராக முதல் போராட்டத்தை அறிவித்தது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் கடந்த 10, 11 தேதிகளில் கோவையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிகழ்கால அரசியல் போக்குகள் குறித்தும், தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வாழ்க்கை பிரச்சினைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், “தவெக அரசு அறிவித்த ஐந்து ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகளுக்கு மட்டும் அல்லாமல், அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்து, கடன் சுமையில் இருந்து விடுவிக்க வேண்டும். பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி ஆகிய எரிபொருள் விலைகளை உடனடியாகக் குறைக்க வேண்டும். எரிபொருட்களின் மீதான கலால் வரி மற்றும் பிற வரிகளை கணிசமாகக் குறைக்க வேண்டும். சமையல் எரிவாயு மானியத்தை முழுமையாக மீட்டெடுத்து விரிவுபடுத்த வேண்டும். எரிபொருள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த நான்கு சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும். இந்த சட்டத் தொகுப்புகளை தமிழ்நாட்டில் அமலாக்க முடியாது என தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு பதில் விபி கிராம்ஜி என்ற பெயரில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை மேலும் வலுப்படுத்தி, தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளித்துள்ளவாறு, காண்ட்ராக்ட், அவுட்சோர்ஸ் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாகத் துவக்க வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் வருகிற ஜூன் 29ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்