Rock Fort Times
Online News

மகளிர் உரிமைத்தொகை நாளை வரவு வைக்கப்படுமா?…* எதிர்பார்ப்பில் இல்லத்தரசிகள்..!

முந்தைய திமுக ஆட்சி காலத்தில் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” என்ற திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வந்தது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ. 3000 மற்றும் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ. 2,000 என மொத்தம் ரூ. 5000 நேரடியாகப் பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. பின்னர் சட்டமன்றத்துக்கான தேர்தல் வாக்குறுதியில் திமுக சார்பில் மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது தமிழக வெற்றி கழகம் ரூ.2500 வழங்கப்படும் என்றும், அதிமுக ரூ.2000 வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்தநிலையில் நேற்று சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் திமுக அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலுரை வழங்கிய முதல்வர் விஜய், திமுகவால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் நிறுத்தப்பட மாட்டாது, தொடரும் என்று கூறினார். அதன்படி, திமுகவால் கொண்டுவரப்பட்ட புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.1000 இன்று (மே 14) அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

மகளிர் உரிமைத்தொகை,

ஆனால், மற்றொரு திட்டமான மகளிர் உரிமைத் தொகை ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதிக்குள் பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். 15- ம் தேதிக்கு இன்னும் ஒரு நாளே எஞ்சி இருப்பதால் நாளை மகளிர் உரிமை தொகை கிடைக்குமா என்று எதிர்பார்ப்பில் இல்லத்தரசிகள் உள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1000  உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது. மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்