Rock Fort Times
Online News

திருச்சி மாநகரில் பட்டப் பகலில் பட்டா கத்தியோடு பைக் பவனி…* இரும்புக்கரம் கொண்டு அடக்குவாரா சிட்டி போலீஸ் கமிஷனர்? ( வீடியோ இணைப்பு)

தமிழகத்தின் மையப்பகுதியாக விளங்கும் திருச்சியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தலைவிரித்து ஆடுகிறது. கடந்த நவம்பர் 10ம்தேதி முதல்வர் அரசு நிகழ்ச்சிக்காக திருச்சி வந்திருந்தபோது, முன்விரோதம் காரணமாக தாமரைச்செல்வன் என்ற இளைஞர் பீமநகர் காவலர் குடியிருப்பிற்குள் புகுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க வெட்டி கொலை செய்யப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட, திருவெறும்பூர் அருகேயுள்ள கூத்தைப்பார் பேருராட்சி கவுன்சிலர் ஒருவர் நள்ளிரவில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சி மக்களை பீதியில் ஆழ்த்தியது. இப்படி நாள்தோறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதால் மாநகரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், நேற்று ( ஏப்ரல் -10ம் தேதி ) மதியம் சுமார் 12 மணியளவில் திருச்சி மாநகரின் பரபரப்பான பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் டி.வி.எஸ். டோல்கேட்டிலிருந்து போஸ்ட் ஆபிஸ் சிக்னல் செல்லும் சாலையில், குட்ஷெட் மேம்பாலம் அருகே இரண்டு இளைஞர்கள் பைக்கில் பட்டாக் கத்தியுடன் செல்லும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

TN 63 V 9915 என்கிற பதிவெண் கொண்ட பைக்கில் இரண்டு பேர் செல்கின்றனர். அதில், டூவீலரின் பின்னால் அமர்ந்திருக்கும் நபர், பெரிய பட்டாக் கத்தியை கையில் வைத்து சுற்றிக்கொண்டும், சாலையில் உரசியபடியும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ரோட்டில் சென்றுள்ளனர். திருச்சி மாநகர் முழுவதும் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் இனி யாரும் காவல்துறையிடமிருந்து தப்பிக்கமுடியாது என பெருமை பேசும் திருச்சி மாநகர காவல்துறையின் கண்ணிலிருந்து இவர்கள் தப்பித்தது எப்படி என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பைக்கில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி, சிக்னலுக்கு சிக்னல் அபராதம் விதிப்பதில் போலீசார் காட்டும் அக்கறையில் சிறிதளவாவது, மாநகரில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கலாச்சாரத்தையும், குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதிலும் காட்டலாமே… என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த விஷயத்தில் திருச்சி சிட்டி கமிஷனர் காமினி ஐபிஎஸ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்