Rock Fort Times
Online News

‘கேஸ்’ தட்டுப்பாட்டை போக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லாதது ஏன்?* திருச்சி பிரச்சாரத்தில் விஜய் கேள்வி!

வருகிற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த கையோடு சென்னையில் விஜய் தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய விஜய் இன்று(ஏப்ரல் 2) விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் தொண்டர்கள் படை சூழ பிரச்சார வாகனத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியை சந்தித்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர், அருகில் இருந்த எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் நின்றபடி பேசுகையில், கேஸ் பிரச்சினையால் சிறிய அளவிலான டீ கடைகள் முதல் உணவகங்கள் வரை பாதிப்பை சந்தித்துள்ளன. இவருக்கு ஒரு பிரச்சனை என்றால் விமானத்தில் டெல்லி சென்று வரும் முதல்வர், கேஸ் தட்டுப்பாட்டை போக்க டெல்லி போய் வந்து இருக்கலாமே? இவர்கள் எப்போது சொன்னதை செய்துள்ளனர், அனைத்தும் வெற்று அறிக்கை மட்டுமே. இவர்கள் 2021ம் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளையே முழுமையாக நிறைவேற்றவில்லை. கேஸ் சிலிண்டருக்கு மானியம், கரும்புக்கு ஆதார விலை, ரேஷனில் சர்க்கரை, உளுந்து கூடுதலாக வழங்கல் இப்படி திமுகவின் பொய் வாக்குறுதிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இவர்கள் ஆட்சியில் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கூட இருப்பதில்லை. ஏன்.. ஒரு கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இயற்கை உபாதையை கழிக்க வெளியே சென்ற பிளஸ்- 2 மாணவி கொலை செய்யப்பட்ட அவல நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. கரூர் நிகழ்ச்சி எப்படி ஒரு சூழ்ச்சியோ, அதேபோல், ஜனநாயகன் பட வெளியீட்டுக்கும் கூட்டு சதி நடைபெறுகிறது. திமுக வேறு, பாஜக வேறு அல்ல இரண்டுமே ஒன்றுதான். தொடர்ந்து தவெக தேர்தல் வாக்குறுதி குறித்து பட்டியலிட்ட விஜய், ஏப்ரல் 23ம் தேதி உங்களுக்கான தேர்தல், வசதியான வாழ்க்கையை உதரிவிட்டு உங்களுக்காக வந்துள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க.

அதோடு, திருச்சி மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றி பெறச் செய்யுங்கள். தவெக வேட்பாளர்கள் வேறு; நான் வேறு அல்ல’’ என்று தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்