திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக மற்றும் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் கழக முதன்மை செயலாளரும், திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளருமான அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று(ஏப்ரல் 1) நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக, மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, மக்கள் நீதி மையம், முக்குலத்தோர் புலிப்படை மற்றும் ஆதித்தமிழர் பேரவை ஆகிய கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும்.
தேர்தல் களத்தில் பிரபல நடிகர்களும், பெரும் செல்வந்தர்களும் வேட்பாளர்களாகக் களம் இறங்கியுள்ளனர். இத்தகைய சவாலான சூழலில், வேட்பாளர்கள் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை மறந்து, ஒற்றுமையுடன் கடுமையாக உழைத்தால் வெற்றியை ஈட்ட முடியும்.
“ஊர் கூடித் தேர் இழுப்பது போல” அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
ஏதேனும் குறைகள் இருப்பின் நிர்வாகிகள் நேரடியாகத் தொடர்புகொண்டு சரிசெய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேசுகையில், இன்று முதல் சரியாக 20 நாட்கள் தேர்தல் பணிகளில் முழு மூச்சுடன் செயல்பட வேண்டும். உழைப்பையும், சிந்தனையையும் தேர்தல் வெற்றிக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் . இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed.