கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் திருச்சிக்கு ரூ.26 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள்…* வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு…!
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் திமுக தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டங்களில் சிறப்புரை ஆற்றி வருகிறார். நேற்று திருவாரூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய அவர், இன்று திருச்சி மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அந்தவகையில் திருவாரூர் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு திருச்சி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று( ஏப்ரல்-1) அதிகாலை திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது காந்தி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் நடந்து சென்றவாறு
திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் அமைச்சர் கே.என்.நேரு, கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ் ஆகியோருக்கு வாக்கு சேகரித்தார். அப்போது பாலக்கரை பகுதியில் உள்ள டீக்கடையில் தேநீர் அருந்தினார்.
தொடர்ந்து திருச்சி உழவர் சந்தை பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் அமைச்சர் கே.என்.நேரு, கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ், திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் துரைராஜ், லால்குடி- பாரிவள்ளல், மண்ணச்சநல்லூர்- கதிரவன், முசிறி என்.எஸ்.கருணைராஜா, கூட்டணி கட்சி வேட்பாளர் மணப்பாறை அப்துல் சமது ஆகியோரை அறிமுகப்படுத்தி சிறப்புரை ஆற்றினார். பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 3 வாரத்துக்கு முன்புதான் திருச்சிக்கு மாபெரும் மாநில மாநாட்டுக்கு வந்தேன். மீண்டும் மீண்டும் நான் திருச்சிக்கு வருவதுபோல் திராவிட மாடல் ஆட்சியும் மீண்டும் மீண்டும் வர வேண்டும். 2021 தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் மக்கள் வெற்றியை தந்தார்கள்.

2021 தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் முழு வெற்றியை தந்து 2 அமைச்சர்களை பெற்று தந்தீர்கள். இந்த முறையும் திருச்சியில் திமுக கூட்டணிக்கு 100 சதவீதம் மக்கள் வெற்றியை தர வேண்டும். விமான நிலையத்துக்கு இணையாக திருச்சியில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானம் என ஏராளமான திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது. காமராஜர் பெயரில் பிரமாண்ட நூலகம், சூரியூரில் ஒலிம்பிக் அகாடமி திறக்கப்பட உள்ளது. தலைநகர் சென்னைக்கே சவால் விடும் வகையில் திருச்சியின் தரம் உயர்ந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் திருச்சிக்காக ரூ.26,000 கோடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தில் 327 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியுள்ளோம். திருச்சி, பஞ்சப்பூரில் டைடல் பார்க் அமைக்கப்படும். காலை உணவுத் திட்டம் திமுக தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாத திட்டம். நான் முதல்வன் திட்டமும் கடந்த தேர்தல் அறிக்கையில் சொல்லாத வாக்குறுதி. தமிழ்நாட்டில் ஜாதி கலவரங்கள் இல்லை, பாஜக ஆளும் மாநிலங்கள்போல மதக் கலவரங்கள் இல்லை. கடந்த முறை போலவே இந்த முறையும் உங்களுடைய பொன்னான வாக்குகளை அளித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித் தந்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.