தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று நேற்றைய தினம் அறிவித்தார். தற்போது திமுக கூட்டணியில் இடம்பெற்று அதிலிருந்து விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சியும் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறுகையில், “நாங்கள் சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பயணித்தோம். 2026 சட்டமன்ற தேர்தலில் கூடுதல் இடம் மற்றும் சில கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினோம். ஆனால் தி.மு.க. அந்த கோரிக்கைகளை சிறிதளவும் பொருட்படுத்தவில்லை. தி.மு.க. அரசில் குறிப்பிட்ட அதிகாரிகளின் ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. அந்த அதிகாரிகளின் பேச்சை கேட்டுக்கொண்டு. தமிழக வாழ்வுரிமை கட்சியை தி.மு.க. புறக்கணித்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள கட்சிகளில் பத்தோடு, ஒன்றாக நான் இல்லை. நீங்கள் ஒரு சிறிய கட்சி, எங்களை பார்த்து என்ன ‘டிமாண்ட்’ வைப்பது என பெரியண்ணன் பாணியில் எங்களை பார்த்து அவர்கள் பேசுகின்றனர். அதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் யார் டிமாண்ட் வைப்பதற்கு என்ற தோணியில் தி.மு.க.வினர் பேசினார்கள். எனவே, கூட்டணியை விட்டு வெளியேறி உள்ளோம். தற்போதைய நிலவரப்படி யாருடனும் கூட்டணி வைக்கும் எண்ணம் இல்லை. இந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று தெரிவித்தார்.

Comments are closed.