தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம் மற்றும் பரிசுப்பொருட்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேர்மையை உறுதி செய்யும் வகையில் மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து, திருச்சி பஞ்சப்பூர் சோதனைச்சாவடி பகுதியில் அதிகாரிகள் இணைந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள், மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் பல்வேறு வாகனங்களில் சோதனை மேற்கொண்டனர். வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பொருட்கள், பணம் உள்ளிட்டவை குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது. அப்போது கட்சிக்கொடி கட்டியபடி வேகமாக வந்த ஒரு காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி அனுமதி இல்லாமல் வாகனங்களில் கட்சிக்கொடி பயன்படுத்தக் கூடாது என்பதால், காரில் இருந்த கொடியை அகற்றுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். பின்னர் அந்த கொடி அகற்றப்பட்டது. இதுபோன்ற சோதனைகள் மூலம் தேர்தல் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதி செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தேர்தல் காலம் முழுவதும் இதுபோன்ற கண்காணிப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர்கள் கூறினர்.

Comments are closed.