அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் பெட்ரோலிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. நம் நாட்டிலும் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் சப்ளை பாதித்துள்ளது. கியாஸ் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்கள், தனியார் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன. இந்தநிலையில் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கும் தட்டுப்பாடு வருமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. இதனால் ஏராளமானவர்கள் போட்டி போட்டு சிலிண்டர்களுக்கு முன்பதிவு செய்கிறார்கள். இதுதொடர்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், எல்.பி.ஜி. கியாஸ் சிலிண்டர் விநியோகம் பாதுகாப்பாகவும், தடையின்றியும் தொடர்கிறது. இந்தியன் ஆயில் நிறுவனம் நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்கு எல்.பி.ஜி. கியாஸ் சிலிண்டர்கள் சீராகக் கிடைப்பதை தொடர்ந்து உறுதி செய்கிறது. சில வாடிக்கையாளர்கள் வழக்கத்தை விட முன்னதாகவே முன்பதிவு செய்து வருகிறார்கள். ஒரு சிறிய நடவடிக்கை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே தேவைப்படும் போது மட்டுமே முன்பதிவு செய்யுங்கள். அத்தியாவசியமற்ற முன்பதிவுகளை தவிர்க்க வேண்டும். எங்கள் பணியாளர்களும், விநியோகஸ்தர்களும் இந்தியா முழுவதும் உள்ள வீடுகளுக்கு சிலிண்டர்கள் சென்றடைவதை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.