பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்: பெட்ரோல், டீசல் போதுமான அளவு கையிருப்பு உள்ளது…* இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு..!
மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலுக்கு ஈரானும் திருப்பி தாக்குவதால் 12 நாட்களாக போர் பதற்றம் நீடித்து வருகிறது. வளைகுடா நாடுகளில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு வரும் சரக்கு கப்பல்களை ஈரான் தடுத்து நிறுத்தியது. இதனால், உலக அளவில் பெரும்பாலான நாடுகளில் எரிவாயு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவானது. குறைந்த அளவே கையிருப்பு வைத்திருந்த நாடுகளில் அதன் தாக்கம் எதிரொலிக்க தொடங்கியது. அந்தவகையில், மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியாவில் எரிவாயு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம் நாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற பீதியில் சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப விற்பனை நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. சிலர் கேன்களிலும் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா? என்ற கேள்விக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்தியன் ஆயில் நிறுவனத்தால் நாடு முழுவதும் இயக்கப்படும் அனைத்து எரிபொருள் நிலையங்களும் தொடர்ந்து திறந்திருக்கும். வழக்கம்போல் செயல்படும். பெட்ரோல், டீசல் மற்றும் இதர பெட்ரோலியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன. மேலும், விநியோக நடவடிக்கைகள் நாடு முழுவதும் சீராக நடைபெற்று வருகின்றன. வாடிக்கையாளர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், எரிபொருள் நிலையங்களில் தேவையற்ற கூட்டத்தைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.